Wednesday, February 9, 2011

போருக்குப் பிந்திய இலங்கையில்...

மாற்றுச் சிந்தனையாளர் என்ன செய்யவேண்டும்?

ஓர் ஆய்வுக்கான அறிமுக உரை

ஏ.ஜி. யோகராஜா

“ஸ்தூலமான நிலைமைகளைப் பற்றிய ஸ்தூலமான ஆய்வே மாக்சிசத்தின் சாரம்”

- லெனின்


இலங்கையில் 30 வருடகால அரசியல்போக்கு 2009 மே மாதம் முடிவுக்கு வந்தது. இது கால நீரோட்டத்தில் நிகழ்ந்த ஒன்றல்ல. புலிகளின் தொடர் நடவடிக்கைகள் இத்தகைய முடிவுக்கு இட்டுச்செல்லும் என்று ஆரூடங்கள் பல கூடப்பட்டபோதும், இவ்வளவு சீக்கிரமாக, இதேசூழலில் இதே வடிவத்தில் நிகழும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. அரசைப் பொறுத்தவரையிலும் சரி, தமிழ் சமூகத்தின் நிலைப்பாட்டிலும் சரி, இது (இம் முடிவு) திடீரென்று ஏற்பட்ட அதிர்ச்சி தரும் நிகழ்வுதான் என்பதில் சந்தேகத்துக்கு இடமில்லை. இத் திடீர் நிகழ்வு அரசு முதல் அரசியல் வாதிகள் பலரையும் குழப்பத்துக்குள்ளாக்கியிருப்பதே யதார்த்தம்.


இக் குழப்பத்தில் இருந்து மீழுவதற்கு முன்பாக, சில மாதங்கள் மட்டும் கடந்தநிலையில் பலரும் பல்விதமான தமது அரசியல் போக்குகளை முன்வைக்கத் தலைப்பட்டனர். ஒருபுறம் ~வட்டுக்கோட்டைத் தீர்மானம்|, ~நாடுகடந்த தமிழீழம்| என்று தமது அரசியல் ஆற்றல்கள் அல்லது இலாபங்களுக்கு ஏற்ப முடிவுகளைத் திணித்தனர் புலம்பெயர்வாழ் புலிகள். இன்னொருபுறம் புலிகளின் பல்வகை அழுத்தங்களினால் உறங்குநிலைக்குட்பட்டிருந்த தமது அரசியலை உயிர்ப்பிக்கும் வகையில், புலம்பெயர் புலிகளின் ஆதரவு சக்திகளை தம்பக்கம் ஈர்த்துக்கொள்ளும் நோக்கில் வியூகம் வகுத்தனர் வேறுசிலர். மறுபுறம் இணக்க அரசியல், அரசுடன் இணைந்து சாதித்தல் என தமது முடிவுகளை முன்மொழிந்தனர் இன்னும் சிலர். கூட்டமைப்போ எதிர்பும் இன்றி இணைவுமின்றித் தத்தளித்தனர். இன்று அதுவே அரசுடன் பேசுதலும், தூரவிலகுதலும் என்று கௌரவமாக இணைவதற்கான முயற்சியில்... இவை எல்லாமே ஒருவகையில் வலதுசாரித்துவ அரசியல் போக்கின் வெளிப்பாடுகளே!


இந்நிலையில் மாற்றுச் சிந்தனையாளர்களும், மாக்சியர்களும் கூட, ஸ்தூல நிலைமைகளைப் புரிந்துகொள்வதற்கான கால அவகாசங்களை எடுத்துக்கொள்ளத் தவறி, முன்னுதாரணங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு முடிவுகளை (தீர்மானங்களை) முன்வைத்தனர்.


இன்று 30 ஆண்டுகால அரசியல்போக்கு முடிவுக்கு வந்து சுமார் இரண்டு வருடங்களை அண்மித்திருக்கிறது காலம். ஆனால் இலங்கை அரசியல் சூழல் இன்னும் தெளிவற்றதாகவே காணப்படுகிறது. அரசியல் கட்சிகள் முதல் அரசு வரை இதுதான் நிலைமை. இன்னும் தொடர்கின்ற சர்வதேச அழுத்தங்களினால் கோபத்தீயில் வெந்து கொண்டிருக்கிறது அரசு. தீர்வுத்திட்டங்களை முன்வைப்பதற்குப் பதிலாக தமிழ் மக்கள் மீதான அழுத்தங்களைப் பிரயோகிப்பதில் மிகுந்த அக்கறையுடன் செயற்படுகிறது. சிங்கள மக்களின் கருத்துச் சுதந்திரத்தின் மீதும் வன்முறையைப் பாய்ச்சி வருகிறது. அதுமட்டுமன்றி வடபகுதியை சிங்களமயப் படுத்துகின்ற ஒரு முயற்சியைத் தவிர மற்றெல்லா வகையிலும் குழப்பத்துக்குட்பட்டுத்தான் செயற்படுகிறது அரசு. வன்முறை, இனக்குரோதம், பழிவாங்குதல் என்ற வகையில் கட்டமைக்கப்பட்ட 30 ஆண்டுகால அரசியல் சிந்தனை வழியில் இருந்து மீள்வதென்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல.


எம்மைப் (மாக்சியரையும் மாற்றுச் சிந்தனையாளரையும்) பொறுத்தவரையில் இது குழப்பத்துக்குரிய காலம் என்பதில் சந்தேகமில்லை. ஆகையினால் இன்றைய இக் கால இடைவெளியை விவாதத்துக்குரிய சூழலாக மாற்றிக்கொள்ளவேண்டியது எமது கடமை. முடிவுகளை முன்வைத்து அம் முடிவுகளுக்காக மோதுவதைத் தவிர்த்து, ஸ்தூல நிலைமைகளுக்கேற்ற முடிவுகளை எட்டுவதற்கான விவாதங்களை முன்வைக்கவேண்டும். ஆணிஅடித்து மூடிவிடுகின்ற விதத்தில் அன்றி மேலும் பல கருத்துக்களை உள்ளிழுக்கும் வகையில், விவாதத்துக்குரிய முறையில் ஆக்கங்களை எழுதுவதன் மூலம், ஆரோக்கியமான அரசியல் முடிவுகளை நோக்கிப் பயணிக்கவேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். கருத்துநிலையான மோதுகைகளை மேற்கொள்ளும் அதேவேளை, வேதனை தரும்வகையிலான தனிநபர்மீதான தாக்குதல்களைத் தவிர்த்துக்கொள்ளவும் வழிசெய்வோம். இத்தகைய சூழலை நோக்கியதோர் முன்முயற்சியாகவே எனது இக் கட்டுரையை இங்கு நான் சமர்ப்பிக்கின்றேன்.


“நூறு மலர்கள் மலரட்டும் நூறு பூக்கள் பூக்கட்டும்”.


ஓர் ஆய்வுக்கான அறிமுக உரை தொடர்கிறது…


“எதிரி எதை ஆதரிக்கிறானோ அதை நாம் எதிர்க்க வேண்டும்.

எதிரி எதை எதிர்க்கிறானோ அதை நாம் ஆதரிக்கவேண்டும்.” – மாஓ


“மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணம் வீசும்” – சி. ஏன் அண்ணாத்துரை


இவ் இரு கூற்றுக்களில் முன்னையது (மாஓ) ஆழ் சிந்தனைக்குரிது. பின்னையது பொதுப்புத்தியில் சிந்திக்கும் மக்களுக்கான ஓர் அறிவாளியின் அனுபவ உரை. பொதுவாகப் பொன்மொழிகள் எல்லாமே பொதுப்புத்தி மையத்தைச் சுற்றிவரும் அறிவாளிகளின் அனுபவ உரைகள்தான். ஆனால் உலகை முந்நகர்த்திச் செல்லும் மாற்றுச் சிந்தனையாளர்களின் (மாக்சியர்களும் மாற்றுச் சிந்தனையாளர்களே) கருத்துக்கள் அவ்வளவு இலகுவில் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றல்ல. ஏனெனில் அவை உள்ளக யாதார்த்தங்களை மட்டுமே பேசுபொருளாகக் கொள்பவை.


மாஓவின் மேற்படி கூற்று காலா காலத்திற்கும் பொருந்தக்கூடிய ஒன்று. இதில் எதிரி என்பவன் மாற்றங்களை (இயங்கியலை) மறுப்பவன். நாம் என்பவர் மாற்றத்தை, உலகை மாற்றுவதற்கான கருத்துக்களை முன்மொழிபவர், இயங்கியலை ஏற்பவர், அதன்வழியில் உலகை நெறிப்படுத்துபவர்கள், அத்தகை செயற்பாட்டில் கால்பதிப்பவர்கள்.


மனித வரலாற்றில் உலகை மாற்றியமைப்பதற்கான தத்துவநெறியை முதன் முதல் முன்வைத்தவர் கார்ல்மாக்ஸ். “இதுவரை தத்துவஞானிகள் உலகை விமர்சித்தது மட்டுமே. ஆனால் எமது கடமை உலகை மாற்றியமைப்பதே!” இது பேராசான் கார்ல்மாக்சின் புகழ்பெற்ற வாக்கியம். “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்” என்பதன் மூலம் மனித வளத்தை ஒருங்கிணைப்பதற்கான புதிய வழிமுறையை முன்வைத்த பேராசான், உலகை மாற்றியமைப்பதற்கான வழிமுறையை மனித வரலாற்றுத் தொடர்ச்சியில் இருந்துதான் பெற்றுக்கொண்டார். முதலாளித்துவ பலாத்காரத்தை முறியடிப்பதற்கு தொழிலாளவர்க்க பலாத்காரத்தை கையில் எடுப்பது என்பதே அது. கார்ல் மார்க்ஸ் அவர்களின் அதிகாரத்துவத்தை (முதலாளித்துவத்தில் இருந்து தொளிலாளித்துவத்திற்கு) கைமாற்றுதல் என்பது கூட யூத கலாச்சாரச் சிந்தனையின் வெளிப்பாடாகவும் பார்க்கத் தோன்றுகிறது. ஆதிகால இஸ்ரேலில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டபோது…“நாம் உலகின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் அந்தந்த இடங்களின் அதிகாரத்துவ அல்லது நிர்வாக மையங்களை நாமே கையகப்படுத்திக்கொள்ள வேண்டும்“ என்று தமக்குள் தாமே சபதம் எடுத்துக்கொண்டனர் என்பது ஐதீகம். இங்கு பேராசான் கார்ல் மார்க்ஸ் அவர்களின் சிறபபம்சம் அவரது கலாச்சாரவழி வந்த இப் பார்வையை உலகம் முழுமையுமான பாட்டாளி மக்களின் விடுதலையை நோக்கி நகர்த்தியமைதான்.


அன்றைய சூழலில், பரந்துபட்ட பாட்டாளி மக்களின் முன்னே, சிறுதொகையினரான அதிகார சக்திகளையும் அவர்களது ஆயுத பலத்தையும் தோற்கடித்தல் என்பதை அவ்வளவு கடினமான காரியமாகக் கணித்திருப்பதற்கு வாய்ப்பில்லை. நவீன ஆயுதங்களுடனான நேரடிமோதுகையைத் தவிர்க்கும்பொருட்டு கெரில்லாப் போர்முறையை அறிமுகம் செய்தார் மாஓ. ஆனால் இன்றைய சூழல், அதிநவீன ஆயுதங்களினால் நிறைந்திருக்கிறது. ஆளில்லாமலே மக்களை அழித்துவிடக்கூடிய நவீன ஆயதங்களை உற்பத்திசெய்திருக்கிறது. கெரில்லாப் போர்முறையும், நேரடி ஆயுத முறைமையும் கேள்விக்குள்ளாகியிருக்கிறது. அது மட்டுமன்றி, கருத்துரீதியில் ஆயுதந்தரித்த போராட்டங்கள் அனைத்தையுமே பயங்ரவாதமாக பிரகடனம் செய்கிறது உலகமயமாதல் கொள்கை. ஒருபுறம் உலகம் முழுவதும பயங்கரவாதத்தை; தாமே நிகழ்த்திக்கொண்டு, மறுபுறம் பயங்கரவாதம் என்ற சொல்லாடலின்கீழ் விடுதலைப் போராட்டங்கள் அனைத்தையும் ஒடுக்கிவிடுவதற்கான சூழலையும் தக்கவைத்துக்கொண்டிருக்கின்றன உலகமயமாதல் கொள்கையும், அதை வழிப்படுத்தும் உலக ஏகாதிபத்தியங்களும். இத்தகைய சூழலில் அதிகாரத்துவ மையங்களை மாற்றுவதற்கான அல்லது கைப்பற்றுவதற்கான மாற்று வழிமுறைகள் பற்றியும் விவாதிக்கவேண்டியவர்கள் ஆகின்றது மனித சமூகம்.


மேலும், வரலாற்றில் புரட்சிக்குப் பிந்திய சமூகங்கள், அரசுகள் அடங்கலாக, வன்முறை அரசியல் முறைமையின் குழந்தையாக (பக்க விளைவாக) அதிகாரத்துவம் பிறப்பெடுத்ததை நாம் அறிவோம். இந்நிலையில் “அரசு என்பது ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை அடக்குவதற்கான கருவி” என்பதன் மறுவாசிப்பு குறித்தும், மக்கள் மீதான அதிகாரத்துவத்தைத் தவிர்க்கும் விதமான அரசியல் மாற்றம் (புரட்சிகள்) பற்றியும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியதும் அவசிமாகும்.


மனிதசமூகத்தில் மாற்றங்கள் என்பன (சோசலிசப் புரட்சியினால் ஏற்படும் மாற்றங்கள் கூட) ஓர் நீண்ட றெயில்பயணத்தின் தொடர்ச்சிதான். ஓவ்வொரு தரிப்பிலும் பழையன கழிதலும் புதியன புகுதலும் நிகழ்ந்துகொண்டிருக்கும் அதேவேளை, ஆரம்பத்தில் ஏறிய பழைய பயணிகள் சிலர் றெயில் பயணத்தின் கடைசித் தரிப்பு வரை வந்துகொண்டேயிருப்பர். ஆனால் அதிகூடிய வயதானவர்களில் மிகக் குறைவானவர்களே இப் பயணத்தில் இணைவர். இணைந்தவர்களிலும் இறுதித் தரிப்புவரை பயணிப்பவர்கள் மிக அரிதாகவே இருப்பர். அதாவது சமூகத்தில் மாற்றங்கள் என்பன பழைமைக்கும் புதுமைக்கும் இடையிலான கலவை என்பதில் ஐயமில்லை. ஆனால் தொன்மைக்கும் பழைமைக்கும் இடையிலான வேறுபாடு துல்லியமாக உணரப்படவேண்டிய ஒன்று. றெயில் பயணத்தில் அதிகூடிய வயதினரை தொன்மைக்கு ஒப்பிடலாம். காலம் காலமாக இன்றுவரை உலக அரசியல் தொன்மை முறைமைகளுடன் பிணைக்கப்பட்ட ஒன்றாகவே இருந்துவருகிறது. ஆனால் மாற்றுச் சிந்தனையாளர்களது இன்றைய கடமை தொன்மைவழி அரசியல் முறைமைகளைக் கையாள்வது அல்லது அதிலிருந்து எம்மை எப்படி முறித்துக்கொள்வது என்பன பற்றியவையே!


இதற்கு நாம் தொன்மை வழி அரசியல் முறைமை பற்றியும், உலகம் முழுமையும் எவ்விதம் அவ் அரசிலில் தங்கியிருக்கின்றன என்பன பற்றியும் ஓரளவு நோக்குவோம்.


இராமாயணம், மகாபாரதம் என்பன ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாயந்த தொன்மைமிகு இதிகாச இலக்கியங்கள் என்பது யாவரும் அறிந்ததே!. ஆனால் நவீன உலகம் பெருமளவில் உணர்ந்திராத ஒரு விடயம், நவீன முதலாளித்துவத்திற்கு முந்தைய காலம் முதல் ~சோசலிச நாடுகள்| அடங்கலாக இன்றைய காலம் வரை, ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த மகாபாரதம் போன்ற தொன்மை அரசியல் முறைமைகளின் தளத்தில்தான் இவ்வுலகம் இயங்கிவருகிறது என்பதுதான். இதை நுணுக்கமாக அறிவதற்கு மகாபாரதம் முழுவதையும், முழுமையாக வாசித்திருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. மகாபாரதத்தின் ஒற்றை வரிக் கதையை (One line story) மட்டும் அறிந்திருந்தாலே போதும். சிறுபான்மைச் சமூகங்கள் பல தமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டங்களில் இதன் தாக்கங்கள் வெள்ளிடைமலை. ஈழத்தமிழர் போராட்டங்களிலும் இதன் தாக்கம் வெளிப்படையானதே! உலகில் தொழிற்சங்கக் கோரிக்கைகள், அரசுகளுக்கும் மக்களுக்கும் இடையிலான போராட்டங்கள், நாடுகளுக்கிடையிலான பிணக்குகள், உலகமகா யுத்தங்களிலும் கூட மகாபாரத குருசேத்திரத்தின் தாக்கங்கள் இருந்து வந்தன, வருகின்றன என்பதை நுனித்த ஆய்வின் வழியில் உய்த்துணர முடியும். சூழ்ச்சிகள், தங்திரங்கள், முதன்மைக் கோரிக்கைகளை முன்வைப்பது வரை மகாபாரதத்தின் வழிமுறைகள் கண்கூடு.


உதாரணத்திற்கு மகாபாரதத்தில் கிருஷ்;ண பரமாத்மா தூது செல்வதை நோக்குவோம்.


துரியோதனன் 101 சகோதரர்களில் மூத்தவன். பாண்டவர்களோ ஐவர் மட்டுமே. பாண்டவர்க்கான அரசுரிமையை துரியோதனன் எவ்விதத்திலும் விட்டுக்கொடுக்கமாட்டான் என்பதை நன்குணர்ந்திருந்தான் கிருஷ்;ணன். பாண்டவர்கள் தமது அரசுரிமையை மீளப்பெறுவதற்கான ஒரேவழி போராட்டம் என்பதையும் முன்கூட்டியே தெரிந்திருந்தான். இருந்தும் பாண்டவர்கள் சார்பாக துரியோதனனிடம் தூது செல்கிறான். மந்திரிகள், சகோதரர்கள் அடங்கலாக வீஷ்மர், துரோணாச்சாரியார் போன்றோர் வீற்றிருக்கும் மகாசபையின் நடுவே மிகுந்த ராஜதந்திரத்துடன்@ அரசு அதிகாரத்தில் பாண்டவர்க்குரிய பங்கினை விளங்க வைக்கிறான். துரியோதனனோ எதனையும் ஏற்றுக்கொள்பவனாக இல்லை. கிருஷ்;ணனோ மேலும் மதிநுட்பம் மிக்கவனாகி நாட்டில் பாதியை பாண்டவர்க்குக் கையளிக்கும்படீ கோருகிறான். துரியோதன் மறுத்துவிட, ஐந்துபேருக்கும் ஐந்து ஊரை வழங்கும்படி கேட்கிறான். அதற்கும் துரியோதனன் செவிசாய்ப்பதாக இல்லை. சபை நடுவே தார்மீக உணர்வுகள் சங்கடப்படுவதை உண்கிறான். மேலும் விட்டுவிடவில்லை. ஐந்து வீட்டையாவது கொடுக்கும்படி கெஞ்சுகிறான் கிருஷ்;ணன். சகோதரர்கள் முதல் சபையில் இருந்தோர்கள் பலரையும் சஞ்சலத்திற்குள்ளாக்கிய கிருஷ்;ணன் புன்னகைத்துவிட்டுச் செல்கிறான். துரியோதனுக்கு ஆதரவான தார்மீகபலம் ஆட்டம் காண்கிறது. சகோதரர்களின் ஒருமித்த பலத்தில் இடி வீழ்கிறது. நடுநிலை வகித்திருந்த துரோணாச்சாரியார் போன்ற பலரின் பலம் கேள்விக்குள்ளாகிறது. கர்ணனோ செஞ்சோற்றுக் கடன் என்றவகையில் துரியோதன் அணியில் நிற்பதென்றபோதும், “நாகாஸ்திரத்தை ஒருமுறைக்கு மேல் பயன்படுத்த மாட்டேன“; என்ற வாக்குறுதியை தாயார் மூலம் பெற்றுவிடுகிறான் கிருஷ்;ணன். தனது தூதின் மூலம் துரியோதனுக்காதரவான தார்மீக ஆதரவை சிதைத்துவிடுகிற கிருஷ்;ணன் போர்தான் ஒரே வழி என்பதை பாண்டவர்க்கும் தெரிவித்துவிடுகிறான்,


ஆயிரம் ஆண்டுகள் தொன்மைமிகு இதே வழிமுறைகள்தான் இன்றைய நவீன உலகிலும் அரசியல் பேச்சுவார்த்தைகளுக்கும், போர்ப்பிரகடனங்களுக்குமான சூத்திரமாக இருந்துவருகிறது.


ஆனால் இன்றைய மனித சமூகம்…


- ஒருபுறத்தில் மனித உரிமைகள் சார்ந்து உயர் கலாச்சாரத்துக்குரிய வளர்ச்சியுடன் செல்கிறது. (இதில் ஆழுமைசெலுத்தும்; ஆதிபத்தியங்களின் சூழ்ச்சிகள், சொல்லாடல்கள் பற்றிய ஆய்வுகளுக்கும் இடமுண்டு.)


- மறுபுறத்தில் உலக ஆதிக்க வல்லரசுகள் தமது லாபநோக்கத்தைத் தக்கவைக்கும் வகையில் ஏகாதிபத்திய சுரண்டல் வழியில் புதிய தேசங்களை உருவாக்குவதும் அழிப்பதுமாகச் செயற்படுகின்றன.


- .உலகை நுகர்வுக்கலாச்சாரமயப்படுத்திய முதலாளித்துவ, ஏகாதிபத்தியங்கள் பாட்டாளி வர்க்கத்தின் நுகர்வுத்திறனை ஊக்குவிக்கும் வகையில் சம்பள உயர்வில் கவனம் செலுத்துகின்றன அல்லது பொருட்களின் உற்பத்திச் செலவைக் குறைத்து, விற்பனை விலையில் வீழ்ச்சியை உண்டுபண்ணி, தமது இலாப நோக்கிற்கு இடையூறு வராத வகையில் மக்களின் வாங்கும் திறனை மேம்படுத்துகின்றன.


- நவீன முதலாளித்துவமோ மக்கள் எழுச்சிகளை எதிர்கொள்வதற்குப் பதிலாக, மக்களின் போர்க்குணாம்சங்களை வலுவிழக்கச் செய்யும் விதத்தில் நெகிழ்ச்சிப் போக்கை ஏற்றுக்கொள்கிறது.


- மனித சமூகம் வர்க்கங்கள் சார்ந்து பல பிரிவுகளாகப் பரிணமித்தபோதும், அநேக நாடுகளில் முதன்மை எதிரியை இலகுவில் அடையாளப்படுத்த முடியாதபடி அதிகாரத்துவம் பன்முகப்படுத்தப்பட்டிருக்கிறது.


இத்தகையதோர் உலக சூழலில், தொன்மைமிகு மகாபாரதச் வழிமுறைகளை, (ஏதிரி காலம் காலமாக தன்னைத் தக்கவைப்பதற்காக மேற்கொள்ளும் வன்முறை அரசியலை) இன்றைக்கும் மக்கள் கைக்கொள்வது சாத்தியமா?


இன்றைய சூழலுக்குரிய மாக்சிய வழிமுறைகள் என்ன? என்பது பற்றி உய்த்துணரவேண்டியது மாக்சியர்களின் அவசியமான கடமையாகும். அல்தூசர் முதல் அந்தோனியோ கிராம்சி வரை மாக்சியர்கள் பலர் மீள்பார்வைக்குரியவர்கள் ஆகின்றனர். பண்பாட்டு மாற்றத்தின் ஊடாக சமூகமாற்றமும், சமூக மாற்றத்தின் வழியே அரசியல் மாற்றமும் என்று கீழிருந்து மேற்செல்லும் வழிமுறைகள் பற்றி நோக்கவேண்டியவர்கள் ஆகின்றோம். இயற்கை விஞ்ஞானத்தில் ஒன்று இன்னொன்றாக மாறுவதை இராசயன அல்லது பௌதீக மாற்றம் என்று வரையறுப்பர். சிலர் புரட்சியை நீர,; நீராவியாக மாறும் பௌதீக மாற்றத்திற்கு ஒப்பிடுவர். ஆனால் சமூக விஞ்ஞானத்தில் ஆன்மீக மாற்றம் முதன்மையானது என்பதை கிராம்சி குறிப்பிடுகிறார்.


இத்தகையதோர் சிந்தனைச் சுழற்சியில் ~எமது நாடும் நாமும்| என்பனபற்றி அடுத்த பகுதியில் நோக்குவோம்.

No comments:

Post a Comment